விபசார தொழில் போட்டியில் வாலிபர் கடத்தல் - 5 பேர் மீது வழக்கு

விபசார தொழில் போட்டியில் வாலிபர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-07-09 09:10 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 20). இவர் 12-ம் வகுப்பு வரை படித்த நிலையில் பொக்லைன் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் சரியான முறையில் வேலை இல்லாததால் சென்னைக்கு வந்தார்.

பின்னர் தனது நண்பர் ஆனந்தன் என்பவர் மூலம் அவரது உறவினர் ரஞ்சித் என்பவரது பழக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் ரஞ்சித் பழக்கடை வைத்து வியாபாரம் செய்யவில்லை என்றும் பெண்களை வைத்து விபசாரம் செய்வது கோபாலகிருஷ்ணனுக்கு தெரிய வந்தது. இதன் மூலம் அதிக அளவில் பணம் கிடைத்ததால் கோபாலகிருஷ்ணனும், ரஞ்சித்தும் சேர்ந்து பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தனர்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கோபாலகிருஷ்ணன் தனியாக பிரிந்து வந்து பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனை ஏற்கனவே விபசார தொழில் செய்து வரும் சல்மான் என்பவர் இனிமேல் நீ தனியாக விபசார தொழில் செய்யக்கூடாது, எனக்கு கீழ் தான் விபசார தொழில் செய்ய வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த கோபாலகிருஷ்ணனை, காரில் கடத்தி வந்து ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனி வீட்டில் அடைத்து வைத்து சல்மான் கொடுமைப்படுத்தி உள்ளார்.

இது குறித்து கோபாலகிருஷ்ணன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் கேரளாவை சேர்ந்த ராபின் (26), நிபின் (27), அகில் (23) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்