ரூ.1 கோடி கேட்டு சிறுமிகள் கடத்தல்: 10 பேருக்கு ஆயுள் தண்டனை

ரூ.1 கோடி கேட்டு 2 சிறுமிகளை கடத்திய வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.

Update: 2022-12-21 21:01 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்தவர் கார்த்திகை செல்வம். பருப்பு மில் உரிமையாளர். இவருடைய நிறுவனத்தில் சுப்புராஜ் என்பவர் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். பின்னர் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருடைய மகன் ரவீந்திரன், தனக்கு சில உதவிகளை செய்யுமாறு கார்த்திகைசெல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் ரவீந்திரனின் நடத்தை பிடிக்காததால் அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன், அவரை பழிவாங்குவது என முடிவு செய்தார். இதற்காக ஒரு கும்பலை திரட்டி, போக்குவரத்து போலீசார் போல வேடமிட்டு அவருடைய 8 வயது மற்றும் 5 வயது என 2 மகள்களையும் கடந்த 16.12.2017 அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது கடத்தினார். அந்த சிறுமிகளை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டினார். இந்த சம்பவம் குறித்து கார்த்திகைசெல்வம், தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

குற்றவாளிகள் கைது

இதற்கிடையே கட்டாயத்தின்பேரில் கடத்தல் கும்பலிடம் முதல்கட்டமாக ரூ.50 லட்சத்தை கார்த்திகை செல்வம் ஒப்படைத்தார். இதையடுத்து அன்று நள்ளிரவில் வீட்டின் அருகில் சிறுமிகளை விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக மதுரை வண்டியூர் ரவீந்திரன் (வயது 45), அவரது மனைவி கலாதேவி (35), தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த கண்ணன் (51), மதுரையை சேர்ந்த வைரமுத்து (41), மணிகண்டன் (43), குணசேகரன் (50),கலாதேவி (35), மதிச்சியம் ராதாகிருஷ்ணன் (52), ஜீவஜோதி (35), விருதுநகர் மணிராஜ் (42), தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சின்னதுரை (39) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

10 பேருக்கும் ஆயுள் தண்டனை

விசாரணை முடிவில், நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருந்ததாவது:-

2 பெண் குழந்தைகளை கடத்திய இந்த குற்றச்செயல், மிகவும் தீவிரமானது. பெண் குழந்தைகளின் மனதையும், அவர்களின் முழு குடும்பத்தையும் மிகவும் பாதித்துள்ளது. வழக்கில் கைதான 10 பேரும் குற்றவாளிகள் ஆவர். அவர்கள் அனைவருக்கும் தலா ஆயுள்தண்டனையும், மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 500 அபராதமாகவும் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்