சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கடத்தல்-போலீசார் விசாரணை

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர் காரில் கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-28 21:03 GMT

நிதி நிறுவனம்

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் தங்கப்பழம் (48). 2 பேரும் சேர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தினர். இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி பொதுமக்கள் ஏராளமானவர்கள் நிதி நிறுவனத்தில் பணம் கட்டினர். ஆனால் அவர்கள் பொதுமக்களுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். ஆனால் ராஜேந்திரன், தங்கப்பழம் திவால் நோட்டீசு கொடுத்ததால், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் 2018-ம் ஆண்டு மீண்டும் நிதிநிறுவனம் தொடங்கினர். அதில் பொதுமக்கள் கட்டும் பணத்திற்கு 2 மடங்கு பணம் தருவதாக கூறியதை நம்பி ஏராளமானவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் பொதுமக்களுக்கு உரிய பணம் கொடுக்காமல் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

காரில் கடத்தல்

இந்தநிலையில் ராஜேந்திரன் மனைவி சரண்யா சேலம் அம்மாபேட்டை போலீசில் தனது கணவரை சிலர் காரில் கடத்தி சென்று விட்டனர். அவரை கண்டு பிடித்து தரும்படி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ராஜேந்திரன், தங்கப்பழம் ஆகிய 2 பேரும் 4 நிதி நிறுவனங்கள் தொடங்கி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து உள்ளனர். நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த சிலர் 2 பேரையும் தேடி வருகின்றனர். எனவே பணம் கட்டி ஏமாந்தவர்கள் ராஜேந்திரனை கடத்தி சென்று இருக்கலாம்.

அல்லது பணம் கட்டி ஏமாந்தவர்களால் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்று விடக்கூடாது என்று நினைத்து தன்னை கடத்தி சென்று விட்டனர் என்று கூறி ராஜேந்திரன் மனைவி மூலம் புகார் தெரிவித்து இருக்கலாம். இருப்பினும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்