தென்காசியில், காதல் திருமண விவகாரத்தில் கடத்தல்: குஜராத்தில் இளம்பெண் குருத்திகாவை மீட்டு மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் - காப்பகத்தில் தங்கவைத்து ரகசிய வாக்குமூலம் பெற உத்தரவு

தென்காசியில், காதல் திருமண விவகாரத்தால் குஜராத்துக்கு கடத்தப்பட்ட இளம்பெண் குருத்திகாவை போலீசார் மீட்டுவந்து, மதுரை ஐகோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை காப்பகத்தில் தங்க வைப்பதுடன், ரகசிய வாக்குமூலம் பெற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-02-07 19:59 GMT


தென்காசியில், காதல் திருமண விவகாரத்தால் குஜராத்துக்கு கடத்தப்பட்ட இளம்பெண் குருத்திகாவை போலீசார் மீட்டுவந்து, மதுரை ஐகோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை காப்பகத்தில் தங்க வைப்பதுடன், ரகசிய வாக்குமூலம் பெற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆட்கொணர்வு மனு

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்தவர் வினித். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுகிறேன். எங்கள் ஊரின் அருகே இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன் படேல். இவருடைய மகள் குருத்திகா படேல்.

நானும் குருத்திகாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்தோம். கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.

இதற்கிடையே தன்னுடைய மகளை காணவில்லை என நவீன் படேல் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தாா். அது தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 4-ந் தேதி நான், எனது மனைவியுடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானோம். அங்கு போலீசார் முன்னிலையில் கணவர் என்ற முறையில் என்னுடன் செல்ல விரும்புவதாக குருத்திகா தெரிவித்தார். அதன்பின்னர் நான் அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

இளம்பெண் கடத்தல்

இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி என்னுடைய மனைவியுடன் தென்காசியில் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு அவருடைய பெற்றோர் வந்து என்னுடன் தகராறில் ஈடுபட்டனா். இதுகுறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். இந்த புகாா் மனு மீதான விசாரணைக்கு நான், என் மனைவி, என் தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானேன்.

ஆனால் என் மனைவியின் பெற்றோர் வருவதற்கு தாமதமானது. இதையடுத்து நாங்கள் எங்கள் வீட்டிற்கு காரில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது எங்களை வழிமறித்து, குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கி என் மனைவி குருத்திகாவை கடத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், குருத்திகாவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா கடத்தப்பட்டு உள்ளார். எனவே என் மனைவியை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஐகோர்ட்டில் ஆஜர்

இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைதாகி உள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குருத்திகா குஜராத்திற்கு கடத்தப்பட்டதாக கூறி போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே குருத்திகாவுக்கு, குஜராத்தில் மைத்ரிக் படேல் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும் தகவல் பரவியது. பின்னர் குருத்திகாவை மீட்ட போலீசார், மதுரை ஐகோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் தனியாக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி, "குருத்திகா கடத்தப்பட்ட விவகாரத்தில், வெவ்வேறான சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் உள்ளன. இது சம்பந்தமாக குருத்திகாவிடம் உரிய விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும்", என்றனர்.

காப்பகத்தில் தங்க வையுங்கள்

இதையடுத்து நீதிபதிகள், "இந்த பெண்ணுடன் மனுதாரர் வினித் திருமணம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளதா? மனுதாரரின் வயது என்ன?" என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, "மனுதாரருக்கு 22 வயது ஆகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான சான்றாக புகைப்படங்கள் உள்ளன" என்று கூறி, அவற்றை தாக்கல் செய்தார்.

பின்னர் நீதிபதிகள், குஜராத்தில் குருத்திகாவை திருமணம் செய்த மைத்ரிக் படேல் கைது செய்யப்பட்டாரா? என கேட்டதற்கு, "அவர் தலைமறைவாக உள்ளார்" என போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், "குருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. குருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும். அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும். இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். அது தொடர்பான அறிக்கையை போலீசார் வருகிற 13-ந் தேதி இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்