காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே சொகுசு காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 20 கி.மீ. தூரம் ஜீப்பில் அதிகாரி துரத்தி சென்று மடக்கி பிடித்தார்.

Update: 2022-09-02 11:59 GMT

தக்கலை, 

தக்கலை அருகே சொகுசு காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 20 கி.மீ. தூரம் ஜீப்பில் அதிகாரி துரத்தி சென்று மடக்கி பிடித்தார்.

வாகன சோதனை

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. அதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் வாகன சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரி சுனிலுக்கு நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக தகவல் வந்தது. உடனே அவர், வருவாய் ஆய்வாளர் சாமினி மற்றும் மரியதாஸ் ஆகியோருடன் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை கையை காட்டி நிறுத்தக்கூறியும், அது நிற்காமல் சென்றது.

20 கி.மீ. தூரம் துரத்தி பிடித்தனர்

உடனே வட்ட வழங்கல் அதிகாரி சுனில் ஜீப்பில் காரை துரத்தி சென்றார். சுமார் 20 கி.மீ. தூரம் துரத்தி சென்று ஞாறாவிளையில் மடக்கி பிடித்தார். உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்,

காரில் சோதனை நடத்திய போது, 30 சாக்கு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததும், மேலும் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்து, தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை உடையார் விளை அரிசி குடோனில் ஒப்படைத்தனர். கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய காரை 20 கி.மீ.தூரம் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்