கூடலூர் கெவிப்பாரா பகுதியில் புதிய மின் மாற்றி பொருத்தியதால் மின்தடை பிரச்சனைக்கு தீர்வு- பொதுமக்கள் நிம்மதி

கூடலூர் கெவிப்பாரா பகுதியில் புதிய மின்மாற்றி பொருத்தியதால் மின்தடை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Update: 2022-07-08 11:25 GMT

கூடலூர்

கூடலூர் கெவிப்பாரா பகுதியில் புதிய மின்மாற்றி பொருத்தியதால் மின்தடை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர் மின் தடை

கூடலூர் பகுதியில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சார விநியோகமும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கடந்த 1 வாரமாக கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஹெல்த் கேம்ப், ராக் லேன்ட் தெரு, கெவிப் பாரா மற்றும் ஓவேலி பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள், அரசு அலுவலக ஊழியர்கள், பள்ளிக்கூடம் மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றி திடீரென பழுதடைந்தது. இதனால் மின்வினியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழுதடைந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி கைவசம் இல்லாததால் உடனடியாக பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை.

புதிய மின் மாற்றி பொருத்தும் பணி

இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊட்டியில் இருந்து புதிய மின்மாற்றியை மின் ஊழியர்கள் லாரியில் கொண்டு வந்தனர். பின்னர் பழுதடைந்த மின்மாற்றியை பளு தூக்கும் எந்திரம் மூலம் அகற்றி விட்டு புதிய மின்மாற்றியை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மின் கம்பிகள் பராமரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நீடித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, ஆண்டுதோறும் கூடலூர் பகுதியில் ஆறு மாதங்கள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் மின்சாதன கருவிகள், தளவாட பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதலாக கையிருப்பு வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்