வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடி:கேரளாவை சேர்ந்தவர் கைது-தீவிரவாதிகளுடன் தொடர்பா? போலீஸ் விசாரணை

சேலத்தில் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2023-02-14 22:24 GMT

அதிகாரிகள் சோதனை

வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி சேலத்தில் மோசடி நடைபெற்று வருவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் கொண்டலாம்பட்டி செல்வநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் கியூ பிரிவு போலீசார் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வீட்டில் சட்டவிரோதமாக செல்போன் இணைப்பகம் மூலம் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் நாட்டு அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த வீட்டில் வசித்து வந்த ஒருவர் மாதம் ரூ.6 ஆயிரத்திற்கு வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்ததும், அவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வதும் தெரியவந்தது.

கேரளாவை சேர்ந்தவர் கைது

மேலும், அந்த வீட்டில் செல்போன் எண்களை ஹேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் 16-க்கும் மேற்பட்ட சிம்பாக்ஸ்கள் மற்றும் செல்போன்கள், 300 சிம்கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல், சேலம் மெய்யனூர் மஜித் தெருவில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வீட்டிலும், சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஹைதர்அலி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர், கடந்த 6 மாதமாக வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வந்ததும், அவரது நண்பரான அமீர் என்பவரை சம்பளத்துக்கு வைத்திருந்ததும், அவரை கொண்டலாம்பட்டி செல்வநகரில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஹைதர் அலியிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தீவிரவாதிகளுடன் தொடர்பா?

இதனிடையே வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதன் மூலம் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பெரிய கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் கைதான கேரளாவை சேர்ந்த ஹைதர் அலிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்