நில அளவீடு என்ற பெயரில் தமிழக எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

நில அளவீடு என்ற பெயரில் தமிழக எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-11-10 13:48 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை மின்னணு நில அளவை என்ற பெயரில் கேரள எல்லைக்குள் சேர்க்கும் கேரள மாநில கம்யூனிச அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. களவு போகும் தமிழ்நாட்டு எல்லைப்பகுதியை காத்திடாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கேரள மாநிலம் முழுவதும் நில வரையறை, இடங்களை வகைப்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக மின்னணு மறு நில அளவீடு செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் எல்லையோர கிராமங்களில் உள்ள நிலங்களை அளவீடு செய்து அதனை கேரளாவுக்குச் சொந்தமான இடங்கள் என்று அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் எல்லைப்பலகை வைத்துச் சென்றுள்ளதாக எல்லையோர தமிழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கேரளா – தமிழ்நாடு இடையிலான 803 கிமீ எல்லையில் வெறும் 203 கிமீ மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரு மாநிலங்களுக்கு இடையிலான மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் இன்றுவரை முறையாக வரையறை செய்யப்படாத நிலையில், எல்லையோர நிலங்களை கேரள அரசு அளவீடு செய்வது எவ்வகையில் சரியானதாக இருக்க முடியும்? கேரள மாநில அரசின் இத்தகைய நில அபகரிப்பை திமுக அரசு இனியும் அனுமதித்தால் ஏறத்தாழ 1500 சதுர கிமீ வரையிலான எல்லைப்பகுதியினை தமிழ்நாடு இழக்க நேரிடும்.

ஏற்கனவே, 1956 ஆம் ஆண்டு மாநில எல்லைப் பிரிப்பின்போதே தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை வனப்பகுதி, பாலக்காடு, நெடுமாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளை தமிழ்நாடு கேரளாவிடம் இழந்தது. அதே காலகட்டத்தில் தமிழக எல்லையோர வனப்பகுதிகளை மலையாள மக்கள் தொடர்ந்து ஆக்கிரமித்ததன் விளைவாக கேரள அதிகாரிகளால் வருவாய் நிலங்களாகப் பதிவு செய்யப்பட்டு, இன்று அவை முழுக்க முழுக்க கேரள மாநில பகுதிகளாகவே மாற்றப்பட்டுவிட்டது.

மேலும், காலங்காலமாக எல்லையோர மலைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழ்ப் பழங்குடியினரையும் கேரள அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றியும் வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழக எல்லையோர கிராமங்களை அபகரிக்கும் நோக்குடன் குடும்ப அட்டை வழங்குதல், நிலவரி வசூலித்தல் உள்ளிட்ட அத்துமீறல்களிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு தனது எல்லைப்பகுதியினை சிறுகசிறுக இழந்து வருகிறது. இவற்றையெல்லாம் தொடக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டிய திராவிட அரசுகள், வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றன என்பதுதான் பெருங்கொடுமையாகும். இதன் மூலம் திராவிட கட்சிகளின் தமிழுணர்வு என்பது தமிழர்களை ஏமாற்றும் தந்திரம் மட்டுமே என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாற்று அணைப்பகுதியிலுள்ள நான்கு மரங்களை வெட்டுவதற்குக்கூட அனுமதிக்காத கேரள மாநில அரசின் மண்ணின் மீதான பற்று, மக்களின் மீதான அக்கறையில், சிறிதளவுகூட தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசிற்கு ஏன் இல்லை? கேரளாவின் முறைகேடான அபகரிப்புகளால் நிலங்களையும், வளங்களையும் தமிழகம் இழப்பதோடு மட்டுமின்றி, முல்லைப் பெரியாற்றுச் சிக்கலைப் போன்று பல ஆற்றுநீர்ச் சிக்கல்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தமிழ்நாடு அரசினை எச்சரிக்கிறேன்.

ஆகவே, இனியாவது மின்னணு மறு நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அபகரிக்க நினைக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு அனுமதித்திடக் கூடாதென்றும், கேரளா – தமிழ்நாடு எல்லைப்பகுதியினை முறையாக அளவீடுகளை மேற்கொண்டு விரைந்து எல்லை வரையறை செய்து முடிக்க வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்