பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு; பவானி ஆற்றங்கரையில் உள்ள குப்பை கிடங்கால் மாசுபடும் தண்ணீர்-அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியப்பம்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குப்பை கிடங்கால் தண்ணீர் மாசுபடுவதாக கூறி அதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-05-01 21:57 GMT

அரியப்பம்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குப்பை கிடங்கால் தண்ணீர் மாசுபடுவதாக கூறி அதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆற்றங்கரையில் குப்பை கிடங்கு

சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் 2-வது கிலோ மீட்டர் தூரத்தில் அரியப்பம்பாளையம் பேரூராட்சி உள்ளது. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்வெளிகளுக்கு இடையே அதற்கு ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.

மாவட்டத்துக்கே முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த பவானி ஆற்றின் மேற்கு கரையில் அரியப்பம்பாளையம் பேரூராட்சி குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்று தண்ணீர் மாசுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மூச்சு திணறல்

மேலும் இந்த குப்பை கிடங்கின் மிக அருகில் பழைய கழையனூர் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இது தவிர இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. அடிக்கடி இந்த குப்பை கிடங்கில் தீ வைத்து விடுவதால் துர்நாற்றம் வீசி இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

பள்ளி குழந்தைகளுக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு புகார்கள் தெரிவித்துள்ளனர். எனவே குப்பை கிடங்கை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உடல் உபாதை

அரியப்பம்பாளையத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்

சரவணகுமார்:-

பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குப்பை கிடங்கால் லட்சக்கணக்கான ஈக்கள் பெருகி குடியிருப்பு பகுதிக்கு பறந்து வந்துவிடுகின்றன. உணவுகளின் மேல் அமர்வதால் அதை உட்கொள்ளும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதையால் பாதிக்கப்படுகிறார்கள். பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் செல்லும் பொதுமக்கள் இந்த குப்பை கிடங்கை கடந்துதான் செல்லவேண்டும். அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பொத்தியபடி ஆற்றுக்கு செல்கிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பை கிடங்கை ஆற்றங்கரையில் இருந்து அகற்றவேண்டும்.

அகற்ற வேண்டும்

சமூக ஆர்வலர் பாலசுந்தரம்:-

தற்போது மத்திய அரசும், மாநில அரசும் நீர்நிலைகளை காப்பதில் முக்கியத்துவம் செலுத்துகிறது. ஆனால் அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ஆற்றங்கரையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பவானி கூடுதுறை காவிரியில் பவானி ஆறு கலக்கும் வரை நூற்றுக்கணக்கான ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி மக்களுக்கு பவானி ஆற்று தண்ணீர்தான் குடிநீருக்காக பயன்படுகிறது. குப்பையால் தண்ணீர் மாசுபட்டு அதை குடிக்கும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆற்றங்கரையில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றினால் மக்கள் பயன்பெறுவார்கள். ஆற்று தண்ணீரும் மாசுபடுவது தடுக்கப்படும்.

தண்ணீரில் மூழ்கிவிடும்...

அரியப்பம்பாளையத்தை சேர்ந்த

எஸ்.பிரகாஷ்:-

பவானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் இருந்து 100 அடி தூரத்தில் பழைய கழையனூர் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காற்று வீசும்போது குப்பை மேட்டில் இருந்து காகிதங்கள் வகுப்பறை வரை பறந்து வந்து விழுகின்றன. இதனால் காற்று வராவிட்டாலும் பரவாயில்லை என்று மாணவர்கள் பள்ளியின் ஜன்னல்களை மூடியே வைத்திருக்கின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படும் போது கரையை தாண்டி தண்ணீர் இந்த குப்பை கிடங்கை மூழ்கடித்து விடுகிறது. அப்போது குடியிருப்பு பகுதிக்கே குப்பைகள் இழுத்து வரப்படுகின்றன. எனவே ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் குப்பை கிடங்கை அகற்றவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்