தமிழகத்தில் முதல் முறையாக கத்திரிமலை உறைவிட பள்ளிக்கூடத்தில் இணையதள உதவியால் படிக்கும் மாணவ-மாணவிகள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நடவடிக்கையால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் முதல் முறையாக கத்திரிமலை கிராம பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டு் உள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி எடுத்த இந்த நடவடிக்கையால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-07-04 22:03 GMT

ஈரோடு

தமிழகத்தில் முதல் முறையாக கத்திரிமலை கிராம பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டு் உள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி எடுத்த இந்த நடவடிக்கையால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கத்திரிமலை

ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்பகுதி மலைக்கிராமமாக அமைந்து உள்ளது கத்திரிமலை. இது சேலம் மாவட்டம் கத்திரிப்பட்டி கிராமத்தையொட்டி அமைந்து உள்ள கத்திரிமலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இங்கு மாதம்பட்டி, மலையம்பட்டி என்று 2 கிராமங்கள் சேர்த்து கத்திரிமலை கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட விடுதி மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் 1998-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. 4 ஆசிரியர் பணியிடங்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் கத்திரி மலை கிராமத்து மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. மாணவ-மாணவிகளின் வீடுகள் அருகிலேயே இருப்பதால் விடுதியில் யாரும் தங்குவதில்லை. இதனால் 8-ம் வகுப்புவரை தகுதியான அனைத்து மாணவ-மாணவிகளும் முடித்து விடுகிறார்கள். ஆனால், இங்கு 8-ம் வகுப்பு படித்து விட்டு உயர்நிலை வகுப்புகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

கலெக்டர் நடவடிக்கை

இந்த கிராமத்தில் இதுவரை அதிகபட்சமாக 12-ம் வகுப்பு படிப்பே உள்ளது. அதுவும் ஓரிருவர் மட்டுமே 12-ம் வகுப்புவரை படித்து இருக்கிறார்கள். முதன்முதலாக ஒரு மாணவி கத்திரிமலை கிராமத்தை விட்டு குடும்பத்துடன் வந்து ஈரோட்டில் தங்கி இருந்து முதன் முறையாக கல்லூரிக்கு செல்வதாக இந்த கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

கத்திரிமலை கிராம மக்களின் அவலம் குறித்து முழுமையாக அறிந்த ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, கத்திரிமலை கிராம மாணவ-மாணவிகளுக்கும் கல்வியை மிக நெருக்கமாக்கும் நடவடிக்கையை எடுத்து உள்ளார். ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்ககம் மூலம் செயல்படுத்தப்படும் புன்னகை திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள கிராமமாக கத்திரிமலை உள்ளது.

இணையதள வசதி

இங்கு நபார்டு வங்கியின் நிதி உதவியாக ரூ.10 லட்சம் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியை 'சென்டர் 4 சோசியல் கம்பியூட்டிங்' என்ற நிறுவனம் செய்து வருகிறது. கத்திரிமலை கிராம பள்ளிக்கூடத்துக்கு இணையதள இணைப்பினை 24 மணி நேரமும் தடையின்றி வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக அந்தியூர், மடம் கிராமம், கத்திரிமலை கிராமம் என 3 இடங்களில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கத்திரிமலை கிராமம் மின்சார வசதியை இன்னும் பெறாத கிராமமாகும். எனவே இங்கு தொலைத்தொடர்பு இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடாமல் இருக்க சூரியசக்தி மின்சார வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அதி வேகத்தில் தடையில்லாத இணையதள வசதியை கத்திரிமலை கிராமம் மட்டுமின்றி, கத்திரிமலை பகுதி பொதுமக்களும் இலவசமாக அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கல்வியாளர்கள்

கத்திரிமலை உறைவிட பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ள கணினி, கேமரா வசதியுடன் உள்ளது. 'சென்டர் 4 சோசியல் கம்பியூட்டிங்' நிறுவனத்தின் கல்வியாளர்கள் மாணவ-மாணவிகளை தொடர்பு கொள்கிறார்கள். ஆன்லைனில் குழந்தைகளுடன் பேசுகிறார்கள். பாடங்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். பிற நேரங்களில் காணொலிகள் மூலம் கல்வி கற்கிறார்கள். இவர்களை பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் ஆர்.சந்திரசேகரன், இடைநிலை ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் வழிநடத்துகிறார்கள்.

ஈர்ப்பு

இதுபற்றி திட்ட பொறுப்பாளர் ரோஸி கே.பல்குணன் கூறியதாவது:-

அந்தியூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு கம்பி இல்லாத தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கி இருக்கிறோம். பள்ளிக்கூடத்துக்கு இணையதள வசதி வழங்கப்பட்ட பிறகு, மாணவ-மாணவிகளை பழக்கப்படுத்துவது மிகுந்த சவாலாக இருந்தது. எனவே முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம். அதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

புன்னகை

3 மாதங்களுக்கு முன்பு புன்னகை திட்டத்தின் முதல் வகுப்பை தொடங்கினோம். நாங்கள் வரும்போது, இந்த மாணவ-மாணவிகள் முகத்தில் புன்னகையை பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது பாருங்கள், ஆன்லைனிலேயே கல்வியாளர்களுடன் பேசுகிறார்கள். இன்னும் 2 ஆண்டுகளில் பாருங்கள், இந்த குழந்தைகள் கான்வெண்டில் படிக்கும் குழந்தைகளை போன்று ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றார்.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த மாதே என்ற பெண் கூறும்போது, 'எங்கள் குழந்தைகள் இப்போது பள்ளிக்கூடத்துக்கு ஆர்வமாக வருகிறார்கள். நிறைய பாடல்கள் பாடுகிறார்கள். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் பள்ளிக்கூடம் வரும்போது மகிழ்ச்சியாக வருகிறார்கள்' என்றார்.

புன்னகை திட்டம் கத்திரிமலை கிராம மக்களின் வாழ்க்கையில் புன்னகையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்