கரூர் மாநகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்
குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட கரூர் மாநகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பொறியியல் பிரிவில் பிட்டராக பணிபுரிந்து வருபவர் தங்கவேல். இவர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு அதிக பணம் பெற்றதாகவும், மாநகராட்சி அனுமதி பெறாமல் இணைப்புகள் வழங்கியதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதுதொடர்பான புகார்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தங்கவேல் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதில் தங்கவேல் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து கரூர் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக தங்கவேல் என்பவரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.