ஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்ற கரூர் உழவர் சந்தை

கரூர் உழவர் சந்தை ஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்றது.

Update: 2022-10-25 18:21 GMT

நாட்டின் முதுகெலும்பான விவசாய தொழிலை பேணிக்காப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், சில திட்டங்கள்தான் பேசப்படுகின்றன. வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, மதுரை மாவட்டம் அண்ணா நகரில் கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி தொடங்கி வைத்த உழவர் சந்தை திட்டம் உன்னத திட்டமாக போற்றப்பட்டது.

உழவர் சந்தைகள்

இந்த திட்டத்தின் நோக்கம், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து நல்ல லாபம் அடைய வேண்டும். மக்களும் மனநிறைவு பெற வேண்டும் என்பதுதான்.

கரூர் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 5 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. கரூர்- திருச்சி சாலையில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதேபோல் வெங்கமேடு, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், குளித்தலை ஆகிய இடங்களிலும் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைகளுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளன.

புதுப்பொலிவு...

ஆனால் மற்ற மாவட்டங்களில் ஆரம்பத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த உழவர் சந்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக அடையாளத்தை இழந்து கால்நடைகள் கட்டவும், வாகனங்களை நிறுத்தவும், மதுபிரியர்கள் சங்கமிக்கும் இடமாகவும் மாறியது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்முரம் காட்டியதால் உழவர் சந்தைகள் மீண்டும் புதுப்பொலிவு பெற்றன.

கரூர் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

இடவசதி

தாந்தோணிமலையை சேர்ந்த விவசாயி நாராயணன்:-

கரூர் உழவர்சந்தையில் காய்கறிகளை கொட்டி விற்பனை செய்யும் அளவிற்கு போதுமான அளவில் இடவசதி உள்ளன. நல்லமுறையில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தை விட தற்போது அதிகளவில் விற்பனை நடக்கிறது. தக்காளி ஒரு நாளைக்கு 200 கிலோ விற்பனை ஆகிறது. பண்டிகை நாட்களில் இருமடங்கு விற்பனையாகிறது.

விலை குறைவு

கரூர் 80 அடி ரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ்:-

உழவர் சந்தையில் அனைத்து காய்கறிகளும் புத்தம் புதிதாக கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் மூலம் நேரடியாக விற்பனை நடைபெறுவதால் காய்கறிகளின் விலை குறைந்த விலையில் கிடைக்கிறது. உழவர்சந்தைக்கு வந்தால் வீட்டிற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் வாங்கி செல்லலாம். வாரச்சந்தைகளை விட உழவர்சந்தையில் விலை குறைவாகத்தான் இருக்கிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் வரவேற்பை உழவர் சந்தை பெற்று உள்ளது.

மக்கள் அதிகளவில் வருகை

ஆணைப்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி:-

உழவர்சந்தையில் அவரைக்காய் விற்று கொண்டிருக்கிறேன். அவரைக்காயை விரும்பி அதிகளவிலான மக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரு நாளைக்கு 100 கிலோ அவரைக்காய் விற்கிறேன். உழவர் சந்தையில் இடவசதி சரியாக இருக்கிறது. தராசு, இடம் உள்ளிட்டவைகள் இலவசமாக தருகிறார்கள். கொரோனா காலத்திற்கு பின்னர் தற்போது மக்கள் அதிகளவில் வருகிறார்கள். உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள் சந்தோஷமாக காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

கீரை வகைகள்

கரூரை சேர்ந்த விஜயா:- உழவர்சந்தையில் காய்கறிகள் குறைவான விலையில் விற்பனை செய்கிறார்கள். வெளிச்சந்தையில் விற்பதை விட விலை குறைவாகத்தான் உள்ளது. வீட்டிற்கு தேவையான அனைத்து காய்கறிகளும் காலை 5 மணி முதலே கிடைக்கிறது. கீரைகள் வகைகளும் அதிகளவில் கிடக்கிறது. தினமும் காய்கறிகள் புத்தம் புதிதாக கிடைக்கிறது. உழவர் சந்தையில் இடவசதி போதுமான அளவில் இருக்கிறது. ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி விவசாயிகளுக்கும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

லாபம்

உப்பிடமங்கலத்தை சேர்ந்த விவசாயி சேகர்:-

வெளிமார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்வதை விட உழவர்சந்தையில் கிலோ ரூ.5 சேர்த்து லாபம் கிடைக்கிறது. உழவர் சந்தையில் இடவசதி அருமையாக செய்து கொடுத்து இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு கேட்கும் விலையில் அனுசரித்து போட்டு கொடுக்கிறார்கள். விவசாயம் செய்து விற்பனை செய்வதில் லாபம் இருக்கிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். அவர்களும் பயன்பெறுகின்றனர். உழவர்சந்தைக்கு பொதுமக்கள் அதிகமாக வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தரமான காய்கறிகள்... நியாயமான விலை...

உழவர்சந்தையின் நோக்கமானது விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் காய்கறிகளை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. உழவர்சந்தை ஆரம்பிக்கும் முன் விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. தற்போது நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்வதின் மூலம் லாபம் அடைகின்றனர். இதேபோல் பொதுமக்களுக்கும் தினமும் தரமான காய்கறிகள், நியாயமான விலையில் கிடைக்கிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் உள்ள மொத்த விலையை விட 20 சதவீதம் அதிகமாகவும், சில்லறை விலையை விட 15 சதவீதம் குறைவாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கரூரில் உள்ள மொத்த மார்க்கெட் விலை நிலவரத்தையும், சில்லரை விலை நிலவரத்தையும் தினமும் மாலையில் இருந்தே பெற்று, அதிகாலை 4 மணிக்கே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் தரச்சான்றிழ்

கரூர் உழவர் சந்தையில் செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து உழவர்சந்தை நிர்வாக அலுவலர் வினோதா கூறியதாவது:-

கரூர் உழவர் சந்தையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக தராசு வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிப்பது இல்லை. கடை வாடகை கிடையாது. அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படுகிறது. மேலும் உழவர்சந்தை அடையாள அட்டை வைத்திருந்தால் பஸ்களில் விவசாயிகளுக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது. தற்போது விவசாயிகள், நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் மின்னணு விலை விவர பலகை வைக்கப்பட்டுள்ளன. காய்கறிகளில் உள்ள நச்சு தன்மையை அளக்கும் கருவி விரைவில் வர இருக்கிறது.

கரூர் உழவர்சந்தையில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் வழங்கப்படும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. மத்திய அரசால் கரூர் உழவர் சந்தைக்கு கிளீன் வெஜிடபுள் மார்க்கெட் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கரூர் உழவர்சந்தையில் கடைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. புனரமைக்கும் பணிக்காக ரூ.48.58 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மேலும் விவசாயிகளுக்கு மின்னணு எடை தராசும் வழங்கப்பட உள்ளன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுகர்வோர்களின் வரத்து அதிகமாக உள்ளது. மாலை நேர உழவர் சந்தை முன்னேற்பாட்டு முறையில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில்

25 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை

கரூர் உழவர்சந்தை கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர்சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 20 முதல் 22 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து (மதிப்பு ரூ.7 முதல் ரூ.8 லட்சம் வரை) வருகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் 150 முதல் 160 விவசாயிகளும், 25 மெட்ரிக் டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்