கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: மாணவ, மாணவிகள் துள்ளிக்குதித்து ஆரவாரம்
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி மாணவ, மாணவிகள் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்தனர்.
பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு 43 மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இந்த பாடங்களுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து பள்ளிகளில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும், அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவினர். மேலும் ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை அடித்து கொண்டனர்.
உற்சாகம்
தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையொட்டி மாணவ, மாணவிகள் துள்ளி குதித்து உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர். ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். மேலும் மாணவ, மாணவிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பின்னர் மாணவர்கள் ஓட்டல்களுக்கு சென்று மதியம் உணவு முடித்து கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இதேபோல் கடந்த மார்ச் 14-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் நிறைவடைகிறது.