கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-05-04 18:36 GMT

சித்திரை திருவிழா

கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.

கடந்த 26-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினமும் மாலை அன்னப்பறவை வாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், வெள்ளி கருட வாகனம், ஐந்து தலை நாக வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரெங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரெங்கநாதர் தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

பின்னர் காலை 8.10 மணியளவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் மேட்டுத்தெரு, தேர்வீதி தெரு, ஆலமரத்து தெரு, ஜவகர்பஜார் வழியாக ஆடி அசைந்தபடி வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று தீர்த்தவாரி

இன்று (வெள்ளிக்கிழமை) அமராவதி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு ரெங்கநாதர் சுவாமி யானையுடன் கூடிய லட்சுமி வாகனத்திலும், கல்யாண வெங்கடரமண சுவாமி ஐந்துதலை நாக வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். நாளை (சனிக்கிழமை) ஆளும் பல்லக்கும், 7-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 8-ந்தேதி ரெங்கநாதர் சுவாமியுடன், கல்யாண வெங்கடரமண சுவாமிக்கும் திருவிழா நிறைவை முன்னிட்டு வண்ணப்பூக்களால் வேள்வி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்