கருணாநிதி நினைவு நாள்: பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான்

சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவு மாரத்தானில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

Update: 2022-08-07 01:49 GMT

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழக இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் ஓட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக மெய்நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது.

2022-ம் ஆண்டுக்கான மாரத்தான் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. 42.2 கி.மீ, 21.1 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என 4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கான ரொக்க பரிசுகளையும், நினைவு பரிசுகளையும் வழங்குகிறார். மாரத்தான் ஓட்டத்தின் பதிவுத்தொகையாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980-ஐ சுகாதாரத்துறை செயலாளரிடம், முதல்-அமைச்சர் ஒப்படைக்கிறார்.

இந்த நிலையில், சென்னை, பெசண்ட் நகரில் கருணாநிதி நினைவு மாரத்தான் தொடங்கியது. 42 கி.மீ மாரத்தானை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் எ.வ.வேலு 21.1 கி.மீ மாரத்தான் பிரிவை தொடங்கி வைத்தார். அமைச்சர் கே.என்.நேரு 10 கி.மீ மாரத்தான் பிரிவை தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்