கருணாநிதி நினைவு நாள்: முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழில் டுவீட்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் முதலில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.