கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி

கருணாநிதி 4-ம் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி நடத்தினர். பேரணி நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-08-08 00:18 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்றார். இல்லம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

கோபாலபுரம் இல்லத்துக்கு எப்போது சென்றாலும் எதிர் வீட்டில் வசிப்போரிடம் நலம் விசாரிப்பதை வாடிக்கையாக கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றும் அவர்கள் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார்.

நலத்திட்ட உதவிகள்

சென்னை சி.ஐ.டி.நகர் இல்லத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி உருவப்படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள 'முரசொலி' அலுவலக வளாகத்தில் உள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது 'நினைவில் வாழும் கலைஞர்' என்ற புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, 'முரசொலி' செல்வம் பெற்றுக்கொண்டார்.

அமைதி பேரணி

கருணாநிதி நினைவுநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கும் கருணாநிதி உருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உருவசிலை கீழே அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது சகோதரர் மு.க.தமிழரசு, அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், துணை செயலாளர் வி.பி.மணி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் மதன்மோகன் உள்பட நிர்வாகிகளும், தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி புறப்பட்டனர். இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உள்பட இளைஞரணி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.

நினைவிடத்தில் அஞ்சலி

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி அருகே தொடங்கிய இந்த பேரணி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முடிந்தது. அங்கு அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க நிர்வாகி தங்கம் உள்பட பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்