மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீப வழிபாடு
மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.
அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தினர் உள்ளனர். இவர்கள் தனி வழிபாடு முறை, வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். அதன்படி இவர்கள் கோளரிசாலையர் பொங்கல் திருவிழா, பங்குனி பிறவானாட் பிறப்பு திருநாள் திருவிழா, வைகாசி பாசுபத சன்னத திருக்காப்பு திருவிழா, புத்தாடை புனைசீர் திருவிழா, புரட்டாசி பிச்சை ஆண்டவர் திருக்கோலகாட்சி திருவிழா, கார்த்திகை கார்க்கும் தீ கை கொண்ட கார்த்திகையர் தீபதிருநாள் போன்ற திருவிழாக்களை கொண்டாடுவது வழக்கம். இதன்படி மெய்வழிச்சாலையில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காலை பவுர்ணமி கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சபைக்கரசர் சாலை வர்க்கவான் கார்த்திகை மகா தீபம் ஏற்றி கூட்டு பிரார்த்தனையுடன் விழாவை தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து தீபங்கள் ஏற்றப்பட்டது. இதில் திரளானோர் தீபங்களை வணங்கி சுற்றிவந்து சபைக்கரசரிடம் ஆசி பெற்றனர். இதில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் திரளான மெய்வழிச்சாலையினர் கலந்து கொண்டனர்.