சிஎன்பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-17 18:45 GMT

நடுவீரப்பட்டு, 

நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் மலையில் பிரசித்திப்பெற்ற புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் பழைய புராண ஏடுகளில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் என்று உள்ளது. எனவே இக்கோவில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் நேற்று கரிநாள் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், காளியம்மன், ராஜராஜேஸ்வர், ராஜராஜேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வீதி உலா

விழாவில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பாலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், புஷ்ப பிரபையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ராஜராஜேஸ்வரர் ராஜேஸ்வரி, சண்டிகேஸ்வரர் சாமிகள் வீதிஉலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்