ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சி

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-07-26 19:42 GMT

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போர் வெற்றி நினைவு தின நிகழ்ச்சி (விஜய் திவஸ்) நேற்று நடைபெற்றது. இதில் என்.சி.சி. வீரர்கள் சீருடை அணிந்து அணிவகுத்து நின்று போர் வீரர்களின் உயிர் தியாகத்திற்கு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீசாரதா கல்விக்குழுமத்தின் நிறுவனத்தலைவர் ம.சிவசுப்ரமணியம் தலைமை தாங்கி பேசும்போது, 1999-ம் ஆண்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் பகுதியில் நடந்த போரில் இந்தியா வெற்றிக்கண்டது. இதில் 527 இந்திய வீரர்கள் உயிர்தியாகம் செய்தனர். 1,363 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். கார்கில் வீரர்களின் நினைவாக திராஸ் பகுதியில் உள்ள டோலோங் மலைஅடிவாரத்தில் இந்திய ராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு தேசிய கொடி நிறுவப்பட்டு, 24 மணிநேரமும் எரியும் அமரர் ஜவான் ஜோதி, ஒளிவீசிக்கொண்டிருக்கிறது. இந்தியாவை அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு கார்கில் போர் வெற்றி முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார்.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி பேசுகையில், ராணுவ வீரர்கள், தமது கண்களுக்கு தெரிந்த எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை காத்து வருகிறார்கள். போலீசார், தமது கண்களுக்கு தெரியாத எதிரிகளிடம் இருந்து மக்களை காத்து வருகின்றனர். போலீசார் உங்களின் நண்பர்கள் என்பதை உணர்ந்து, சமுதாயத்தில் தவறுகள் ஏற்பட்டால் அதனை போலீசாரிடம் தைரியமாக தெரிவிக்க வேண்டும். இதனால் பிரச்சினைகள் பெரிதாவது தடுக்கப்படுவதுடன், உடனே தீர்வும் ஏற்படும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கலைச்செல்வி, ஸ்ரீராமகிருஷ்ணா குழுமத்தை சேர்ந்த கல்விநிறுவனங்களின் முதல்வர்கள் கோமதி, சுபலெட்சுமி, சத்தியா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீராமகிருஷ்ணா குழுமத்தின் துணைத்தலைவர் விவேகானந்தன் வரவேற்றார். முடிவில் வேதியியல் ஆசிரியர் திவ்யராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்