கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணிகட்டி ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-08 18:09 GMT

இந்தி திணிப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற ஆய்வுக்குழு ஜனாதிபதிக்கு தனது பரிந்துரையை அளித்துள்ளது. அதில் இந்தியா முழுவதும் பாடத்திட்டங்கள் இந்தியிலோ அல்லது பிராந்திய மொழிகளிலோ இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. விரும்பினால் ஆங்கிலத்தை வைத்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் அரசு பணி தேர்வுகளில் ஆங்கிலம் கட்டாயம் என்பதை நீக்கி உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தியை மட்டுமே பிரதானப்படுத்துவது இந்தி தெரியாத மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பை தடுக்கும் செயலாக கருதப்படுகிறது.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர் அமைப்பினரும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று மாலை வகுப்புகள் முடிந்தவுடன் கல்லூரி நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அன்பரசன் தலைமையில் திரண்டனர்.

வாயில் கருப்பு துணி

பின்னர் மாணவர்கள் இந்தியை திணிக்கக்கூடாது என வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி வாயில் கருப்பு துணிகட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில மொழிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்