கோடையில் களை கட்டிய கன்னியாகுமரி
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி களை கட்டியது.
தென்தாமரைகுளம்:
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி களை கட்டியது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோடை விடுமுறை சீசன் இந்த ஆண்டு கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான நேற்று கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனா். பின்னர், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
நீண்ட வரிசையில்
இதையடுத்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண படகுத்துறையில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் உற்சாகத்துடன் சென்று விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு திரும்பினர்.
இதேபோல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சிக்கோபுரம், பழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடல் அலையை ரசித்தனர்
மாலையில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசவதால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர். அவர்கள் கடல் அலையின் அழகை கண்டு ரசித்தனர். இதனால், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கன்னியாகுமரி களை கட்டியது. கூட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.