கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-01 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

வைகாசி பெருந்திருவிழா

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி தினமும் காலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு அம்மன் வாகனத்தில் பவனி வருதல், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

தேரோட்டம்

9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 8.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரத வீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து உற்சவ அம்மனை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்தனர். தேரில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்தது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலர்தூவி வரவேற்பு

தேரோட்டத்தின்போது வழிநெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்தவாறு தேரின் மீது மலர் தூவி வழிபட்டனர். தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானக்காரம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம், கஞ்சி தர்மம் ஆகியவை வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

ஆராட்டு

10-ம் திருவிழாவான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.  

Tags:    

மேலும் செய்திகள்