திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த காந்திமதியிடம் ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்தோம். பணத்தை கொடுத்து எங்களிடம் புரோநோட், பத்திர பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டார். நாங்கள் பணம் எடுத்து விட்டு மாத தவணைத்தொகையை சில மாதம் கட்ட முடியாமல் போனது. அதன்பிறகு தவணைத்தொகையை சேர்த்து செலுத்த சென்றபோது, நாங்கள் கொடுக்க வேண்டிய பணத்துக்கு அதிகப்படியான வட்டியை சேர்த்து காந்திமதி கூறினார். மேலும் பணத்தை கொடுக்காவிட்டால், ஏற்கனவே கையெழுத்து போட்டுக்கொடுத்த பத்திரத்தை வைத்து வக்கீல் மூலமாக நோட்டீஸ் விடுவதாக அச்சுறுத்துகிறார். பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக்கொடுமை செய்து வரும் காந்திமதி மீது ஏற்கனவே போலீசில் வழக்கு உள்ளது. எனவே எங்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.