பெற்றோருடன் பேசி மாணவி உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை கலவரம் நடந்த இடத்தை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தகவல்

பெற்றோருடன் பேசி மாணவியின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கனியாமூர் கலவரம் நடந்த இடத்தை பார்வையிட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தெரிவித்தார்.

Update: 2022-07-20 17:40 GMT


சின்னசேலம், 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம மான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

2 போலீஸ் சூப்பிரண்டுகள்

இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் கனியாமூர் பள்ளிக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படும் பகுதி மற்றும் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட பள்ளி வளாகம், தீ வைக்கப்பட்ட வாகனங்கள் என்று அனைத்தையும் பார்வையிட்டனர். தொடர்ந்து, பள்ளிக்கு வெளியே தீ வைத்து கொளுத்தப்பட்ட போலீஸ் வாகனத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

தகுந்த தண்டனை

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நிருபர்களிடம் கூறுகையில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பணியாற்றுவோம்.

மாணவி ஸ்ரீமதியின் இழப்பு பேரிழப்பாகும். அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாதது. அவரது பெற்றோருடன் பேசி மாணவியின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது தீவிரமாக நடந்து வரும் விசாரணையில் குற்றம் எந்த அளவிற்கு செய்து இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டு அதற்குத் தகுந்த தண்டனையை தருவதற்காக தற்போதைய வழக்கு பிரிவில் மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்