கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
திருவெண்காடு:
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில்
திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இரணிய மற்றும் யோக நரசிம்மர்கள், திருமங்கையாழ்வார் அகோர தனி சன்னதியில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
நேற்று முக்கிய திருவிழாவான தேரோட்டம் நடந்தது. இதனை ஒட்டி கல்யாண ரங்கநாதர் பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி தேரில் எழுந்தருளினர். பின்னர் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து முதலில் திருமங்கை ஆழ்வார் தேரை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்யாண ரங்கநாதர் பெருமாள் தேரை ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் கோவில் நிர்வாக அதிகாரிகள் அன்பரசன், முருகன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், விழா கமிட்டி செயலாளர் ரகுநாதன், ஊராட்சி உறுப்பினர் ராஜு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரண்டு தேர்களும் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.