கல்மந்தை காலனி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி கல்மந்தை காலனி பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி கல்மந்தை காலனி பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
திருச்சி கல்மந்தை காலனி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த 118 வீடுகளில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவை இடிக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டிமுடிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்த 118 பேரும் தங்களுக்கு வீடு ஒதுக்க கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முன்பணமாக ரூ.1 லட்சம் செலுத்திவிட்டனர்.
ஆனால் இதுவரை அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யவில்லை. இதையடுத்து பலமுறை போராட்டம் நடத்தியும், மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கல்மந்தை காலனி பகுதி பொதுமக்கள் நேற்று காலை குடும்பத்துடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடை பெற்ற போராட்டத்துக்கு கல்மந்தை கிளை செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் கல்மந்தை காலனி பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். வீடு வழங்காவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பாலக்கரையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் முன்னறிவிப்பு இன்றி, குலுக்கல் முறையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த கல்மந்தை பகுதி பொதுமக்கள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு சென்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி ஆர்.டி.ஓ. சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நாளை தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை, குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.