கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்; மேயரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மனு

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மேயரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு வழங்கினர்.

Update: 2023-05-30 19:01 GMT

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மேயரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு வழங்கினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துணை ஆணையாளர் தாணுமாமலைமூர்த்தி, உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட 33-வது வார்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகில் சுகாதார துறையை சேர்ந்த ஊழியர்கள் பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கட்டிட கழிவுகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

பாளையங்கோட்டை மகாராஜாநகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ''நெல்லை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே வணிக ரீதியான மற்றும் பொதுமக்கள் குடிபுகாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதை கோடை காலம் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

அடிப்படை வசதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை தாலுகா குழு செயலாளர் துரை நாராயணன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சிக்கு வந்து நெல்லை டவுன் கல்லணை பள்ளிக்கூடத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டி கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ''கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர். பழைய கல்லணை கட்டிடத்திலும் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக காலை, மாலை என சுழற்சி முறையில் மாணவிகள் பயின்று வருகின்றனர். பழைய கல்லணை பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 4 வருடங்களாக புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. பழைய கல்லணை பள்ளியில் 56 ஆசிரியர்களுக்கு 2 கழிப்பிடம்தான் உள்ளது. எனவே கூடுதல் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். தினசரி பயன்படுத்தும் பகுதியான குடிநீர் குழாய், கைகள் கழுவும் பகுதிகளையும் சீரமைக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

தெருவிளக்கு

பழைய பேட்டை வாணியர் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் கொடுத்த மனுவில், ''நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் சாலையில் ஓரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தேன். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அதிகாரிகள் அகற்றி விட்டனர். எனவே எனக்கு இட்லி கடை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

41-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ராதாசங்கர் கொடுத்த மனுவில், ''எனது வார்டுக்குட்பட்ட பாளையங்கோட்டை பொதிகை நகர், காருண்யாநகர், பாரதிநகர், நேருநகர், ராமலிங்கா நகர், பிடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு தெருவிளக்குகளில் 90 வாட்ஸ் எல்.இ.டி. பல்பு அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்