கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் -ஐகோர்ட்டு

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-14 22:41 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கை நியாயமாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது, போலீஸ் தரப்பில் விசாரணை குறித்த அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.

பின்னர், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்த பின்னரும், இதுவரை மாணவியின் பெற்றோர் செல்போனை ஒப்படைக்கவில்லை என்று கூறினார்.

ஒப்படைக்க வேண்டும்

மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல் சங்கரசுப்பு, ''தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் புலன் விசாரணை நடத்த முடியும் என்றில்லை. இதுகுறித்து மனுதாரர் தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன். வழக்கின் முக்கிய ஆதாரமான, பிரேத பரிசோதனை முறையாக நடைபெறவில்லை'' என்று கூறினார்.

அதற்கு நீதிபதி, ''பிரேத பரிசோதனை என்பது சம்பந்தப்பட்ட நபர் எப்படி இறந்தார்? என்று மட்டும்தான் கூறும். அதன்பின்னர், யாரால் கொலை செய்யப்பட்டார் என்று கண்டறிவது போலீசாரின் புலன் விசாரணையில் உள்ளது. மரணத்துக்கான காரணத்தை கண்டறிய மாணவியின் செல்போன் அவசியம். அவர் கடைசியாக யாருடன் எல்லாம் பேசினார் என்பதை கண்டறிய வேண்டும். எனவே, அந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

குண்டர் சட்டம்

இதேபோல கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் விஜய் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி தமிழ்பிரியா தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீஸ் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்