மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது.

Update: 2022-07-19 17:29 GMT


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் ஸ்ரீமதி(வயது 17), மகன் சந்தோஷ்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீமதி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். சந்தோசும் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தினசரி பள்ளி பஸ்சில் வீட்டுக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரமாக வெடித்தது. பள்ளிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்து சென்றனர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்த சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் பெற்றோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் சின்னசேலம் போலீசார், தாங்கள் விசாரணை நடத்திய விவரங்கள், முதல் தகவல் அறிக்கை, வழக்கு விசாரணை சம்பந்தமான முக்கிய ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கை விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் கையில் எடுத்து தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மருத்துவமனையில் விசாரணை

முதல்கட்டமாக காலை 9.30 மணியளவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி, சுந்தர்ராஜன், சப்- இன்ஸ்பெக்டர் வீரசேகர் மற்றும் போலீசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்தனர்.

அப்போது அவர்கள், சம்பவத்தன்று மாணவி ஸ்ரீமதியை அவர் படிக்கும் பள்ளியிலிருந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எத்தனை மணிக்கு வந்தார்கள், மருத்துவமனைக்கு வரும்போது மாணவி உயிருடன் இருந்தாரா? அல்லது வரும்போது இறந்தே வந்தாரா? என்றும், அவருக்கு ஏதேனும் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற விவரங்கள் குறித்தும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் உஷா மற்றும் டாக்டர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதோடு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சவக்கிடங்கிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள மாணவி ஸ்ரீமதியின் உடலை பார்வையிட்டனர். தொடர்ந்து, மாணவியின் உடலை ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை, மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.

பள்ளியில் விசாரணை

அதன்பிறகு கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், மதியம் 2 மணியளவில் கனியாமூரில் உள்ள மாணவி படித்த பள்ளியான சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு மாணவி கீழே விழுந்ததாக கூறப்பட்ட இடத்தையும், பள்ளியில் மாணவி தங்கி இருந்த விடுதியின் அறை, அதன் வளாகப் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டனர். அதோடு, அங்குள்ள 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்த தரையின் தூரத்தை அளந்து பார்த்து ஆய்வு செய்தனர்.

மேலும் மாடியில் இருந்து கீழே குதித்த பகுதியில் இருக்கும் மரத்தில் ஒடிந்துள்ள கிளை பகுதிகளை பார்வையிட்டு, மாணவி கீழே விழும்போது, எந்த கோணத்தில் மரக்கிளைகள் ஒடிந்திருக்கும் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து, போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறைகள் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளி பஸ்கள், கார்கள், டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட வாகனங்களையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சக மாணவிகளிடமும் விசாரிக்க முடிவு

மேலும் மாணவி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரிடமும் மற்றும் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களிடமும், மாணவி ஸ்ரீமதியுடன் விடுதியில் தங்கி பயின்று வரும் சக மாணவிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதேபோல், மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்திற்கு சென்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்