கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை

விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள உண்டக்கல் வளவு, மேல்நிலவூர், கீழ்நிலவூர், தரிசு காடு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பகுதியில் உள்ள நிலங்களை சீரமைத்து காலங்காலமாக மரவள்ளி, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது அந்த நிலத்தை வனத்துறையினர் காப்புகாடாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக நிலங்களை அளவீடு செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் விவசாயம் செய்யும் நிலத்தை காப்புக்காடாக மாற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நாங்கள் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும், மேலும் விவசாய நிலங்களை வனத்துறையினர் காப்புகாடாக மாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி 100-க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

அவர்களை கள்ளக்குறிச்சி போலீசார் சமாதானபடுத்தினர். இதையடுத்து மலைவாழ் மக்கள் கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று மலைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்