உடுமலையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நேற்று 3-வது நாளாக கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கலைத்திருவிழா
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் உடுமலை தளிசாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
இதில் 3-வது நாளான நேற்று உடுமலை வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மொழித்திறன் மேம்பாடு, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், களிமண் உருவங்கள் செய்தல், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்துதல், ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், கையெழுத்துப்போட்டி, கவிதை எழுதுதல், கட்டுரைப்போட்டி, ஆங்கில பேச்சு, விவாத மேடை போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. நேற்றைய போட்டிகளை உடுமலை வட்டார கல்வி அலுவலர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார்.
400 மாணவ-மாணவிகள்
போட்டிகளில் 400- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மல்லியசாமி, ராஜசேகர், லீலா கண்ணன், தர்மராஜ், ஈஸ்வரன் பிரசாத், பாலகிருஷ்ணன் அய்யப்பன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் போட்டிகளின் நடுவர்களாக பணியாற்றினர். கலைத்திருவிழாவின் நிறைவுநாளான இன்று (வெள்ளிக்கிழமை) 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடக்கிறது.