2½ லட்சம் புத்தகங்களுடன் மதுரையில் கலைஞர் நூலகம் ! ஜூலை 15-ந் தேதி முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்
மதுரையில் கட்டப்படும் கலைஞர் நூலகத்தை ஜூலை 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மதுரை,
மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டிடத்திற்காக ரூ.99 கோடியும், நூலகத்திற்கான புத்தகங்களை வாங்க ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க ரூ.5 கோடியும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூலகத்திற்கு கீழ் தளம், தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுரஅடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 2022-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
அனைத்து தளங்களிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. கீழ் தளத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது.
தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 250 இருக்கை வசதிகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
முதல் தளத்தில் குழந்தைகள் நூலகம், வாசகர்கள் மாதம், வாரம், தினசரி பத்திரிகைகளை படிக்கும் வசதி; 2-வது தளத்தில் கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் அவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம் மற்றும் வரலாற்று புத்தகங்கள், திரைப்பட புத்தகங்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.
அதோடு அங்கு கலைஞர் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. அந்த அரங்கத்தில் 4 ஆயிரம் ஆய்வறிக்கைகள் இடம் பெறுகின்றன. போட்டித் தேர்வு எழுதுவோருக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படும்.
3-வது தளம் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கிய பகுதியாகவும், 4-வது தளம் ஆங்கில நூல்களைக் கொண்ட தளமாகவும், 5-ம் தளம் ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்கள் உள்ள பகுதியாகவும் அமைகின்றன. 6-வது தளம் திறந்த வெளி படிப்பகங்கள், உணவகம் உள்ள பகுதியாக இருக்கும்.
கலைஞர் நினைவு நூலகத்தின் முன்பகுதியில் கருணாநிதியின் உருவச்சிலை அமைக்கப்படுகிறது. மாடியில் மாடித் தோட்டம், அங்கு புத்தகங்களை வாசிக்கும் வசதி ஆகியவை அமைக்கப்படும். நூலகத்திற்கான 2½ லட்சம் புத்தகங்கள் ரூ.10 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன. புத்தகங்களை வைக்கும் தளவாடங்கள் ரூ.16.70 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன.
உலகத் தரத்துடன் கட்டப்படும் கலைஞர் நூலகத்தை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.