'கக்கன்' திரைப்பட ஒலி நாடா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

‘கக்கன்' திரைப்பட ஒலி நாடாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Update: 2023-07-26 00:19 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தியாகி பி.கக்கன் வாழ்க்கை வரலாற்றை, சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோசப் பேபி திரைப்படமாக தயாரித்துள்ளார். 'கக்கன்' திரைப்பட ஒலி நாடா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் உள்ள சிற்றரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'கக்கன்' திரைப்பட ஒலிநாடா மற்றும் டிரைலரை வெளியிட்டார். விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

கக்கனின் மகள் பெற்றுக்கொண்டார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 'கக்கன்' திரைப்பட ஒலிநாடாவை, தியாகி கக்கனின் மகள் கே.கஸ்தூரிபாய், கக்கனின் பேத்தியும், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவருமான எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும், கக்கன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜோசப் பேபி, இசையமைப்பாளர் தேவா, பாடல் ஆசிரியர் ஏகாதசி, இயக்குனர்கள் பிரபு மாணிக்கம், ராகோத் விஜய், படைப்பாக்க இயக்குனர் ஏ.எஸ்.சந்தோஷ் ராமா உள்ளிட்டோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். விழா முடிவில் படக்குழுவினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். விழாவில் கக்கன் திரைப்பட டிரைலர் மற்றும் 2 பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, இமயாக கக்கன் (கக்கனின் தம்பி மகள்), மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ரங்கபாஷியம், பி.வி.தமிழ்செல்வன் (கக்கனின் தம்பி மகன்), மாநில செயலாளர் ஜி.தமிழ்செல்வன், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் மற்றும் கக்கன் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்