கைலாசநாதர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

விருத்தாசலம் அருகே கைலாசநாதர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-28 17:16 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த, கொடுக்கூர் அருகே உள்ள பெரம்பலூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியான சுப்ரமணியன் என்பவர் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல், கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை சுப்ரமணியன் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. உண்டியலில் ரூ.10 ஆயிரம் இருந்து இருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்