கபடி விளையாட்டில் அசத்தும் 'எட்டுபுளிக்காடு கிராம வீரர்கள்'

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் உள்ள வீரர்கள் கபடி விளையாட்டில் அசத்தி வருகிறார்கள். தேசிய அளவில் சாதிக்க தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-26 19:14 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் உள்ள வீரர்கள் கபடி விளையாட்டில் அசத்தி வருகிறார்கள். தேசிய அளவில் சாதிக்க தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறமைக்கு பஞ்சம் இல்லை

உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பெற்று விட்டது. ஆனால் உலக அரங்கில் இந்திய மக்கள், தங்கள் திறமைகளை வெளிக்காட்டி முதலிடத்தை பெற்று விட்டார்களா? என்று கேட்டால் இல்லை என்பது தான் ஒரே பதில்.

மனித எண்ணிக்கைக்கு பஞ்சமில்லாத இந்தியாவில் திறமை மிக்க மனிதர்களுக்கும் பஞ்சம் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உலக அரங்கில் இந்தியாவின் திறமையாளர்கள் சாதிப்பதற்கு ஊக்கமும், உதவியும், சரியான வழிகாட்டுதலும் வழங்கப்படுவது இல்லை என்பதும் உண்மை தான்.

சாதிக்க உதவும் வழிமுறைகள்

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் விளையாடப்படும் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளில் திறமை மிக்கவர்கள் ஏராளம் உள்ளனர். கிராமத்துக்கு கிராமம் விளையாட்டு ஆர்வமும், தனித்துவம் மிக்க திறமையும் கொட்டிக்கிடக்கிறது.

இவர்களுடைய திறமைக்கு உத்வேகம் அளித்து உலக அரங்கில் சாதிப்பதற்கு உதவும் வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதே நிதர்சனம். கிராமங்களை காட்டிலும் நகர பகுதிகளில் தான் விளையாட்டு பயிற்சிக்கான கட்டமைப்புகள் அதிகமாக உள்ளன.

கிராம இளைஞர்களின் ஏக்கம்

ஆனால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கிராமங்களில் தான் அதிகம் உள்ளனர். கிராமங்களிலும் கபடி போன்ற விளையாட்டு பயிற்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காதா? என கிராமத்து இளைஞர்கள் ஏங்காத நாள் இல்லை.

பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள், மைதான வசதி, முறையான பயிற்சி கிடைக்காமல் கிராம இளைஞர்களின் திறமை அனைத்தும் வீணாவதை கண் கூடாகவே பார்க்க முடிகிறது என விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

எட்டுபுளிக்காடு கபடி வீரர்கள்

கிராமங்களில் எந்த அளவுக்கு விளையாட்டு மீதான ஆர்வம் ஊக்கம் பெற்றிருக்கிறது என்பதற்கு கண் முன் உள்ள உதாரணமாக திகழ்கிறது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செம்பாளூர் ஊராட்சியில் உள்ள எட்டுபுளிக்காடு என்ற கிராமம்.

இந்த கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கபடி வீரர்களாக இருக்கிறார்கள். கபடி விளையாட்டின் நுணுக்கங்களில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தேசிய அளவில் கபடியில் சாதிக்க விரும்பும் எட்டுபுளிக்காடு கிராமத்து இளைஞர்கள், அரசின் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.

தேசிய அளவில் வாய்ப்பு இல்லை

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கபடி போட்டிகளில் வெற்றி பெற்று ஏராளமான பரிசு கோப்பைகளை இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வென்றுள்ளனர். ஆனால் கபடி விளையாட்டுக்கு தேவையான பயிற்சிகள் மேற்கொள்ள மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கபடி விளையாட்டில் அசத்தும் எட்டுபுளிக்காடு வீரர்களின் வேதனையாக உள்ளது.

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த நேதாஜி கபடி கழகத்தின் பயிற்சியாளர்கள் வீரபாண்டி, சத்தியசிவம் ஆகியோர் கூறியதாவது:-

கபடி குழு

எங்கள் கிராமத்தில(எட்டுப்புளிக்காடு)் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கபடி குழுவினை நடத்தி வருகிறோம். புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், மதுரை, சிவகங்கை, தென்காசி, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்று கபடி போட்டியில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளோம்.

கடந்த மாதம்(மார்ச்) நாமக்கல்லில் நடந்த கல்லூரிகளுக்கான கபடி போட்டியில் எங்கள் குழுவை சேர்ந்த கபடி வீரர்களும் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். எங்களால் வெளிமாநிலங்களில் நடக்கும் போட்டிகளுக்கு சென்று செலவு செய்து விளையாட முடியவில்லை. இதனால் மற்ற கபடி அணியினருடன் இணைந்து விளையாடி பரிசுகளை வென்று அவர்களிடமே கொடுக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் உள்ள வீரர்கள் கபடி விளையாட்டில் அசத்தி வருகிறார்கள். தேசிய அளவில் சாதிக்க தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய நேதாஜி கபடி குழுவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மாநில அளவிலான போட்டியை நடத்தி வருகிறோம். இந்த போட்டிகளை மின்னொளி அரங்கத்தில் நடத்துவோம். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்வார்கள். இந்த போட்டியை தஞ்சையில் உள்ள அமெச்சூர் கபடி கழகத்தில் முறையாக அனுமதி பெற்று நடத்துவோம்.

தற்போது தூத்துக்குடியில் பிளஸ்-2 முடித்த 75 மாணவர்களுக்கு கபடி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் எங்கள் கிராமத்தை சேர்ந்த நேதாஜி கபடி குழுவில் உள்ள கோகுல், சுரேந்தர் ஆகிய 2 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தேசிய அளவில் சாதிக்க முடியும்

எங்களுக்கு பயிற்சி மேற்கொள்ள நிரந்தரமான விளையாட்டு மைதானம் வேண்டும். இதை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இதற்கு உதவ வேண்டும். மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறுகின்ற போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் பட்சத்தில் எங்களால் தேசிய அளவிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் திறமை மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

பரிசு தொகையை கபடிக்காக செலவிடுகிறோம்

பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசுத்தொகையினை அப்படியே கபடி குழுவிற்காக மட்டுமே செலவு செய்து வருகிறோம் என கபடி குழுவினர் கூறுகிறார்கள்.ஊரில் கபடி குழுவில் உள்ள அனைவருக்கும் உடம்பில் ஒரு சிறு காயமாவது காணப்படுகிறது. கபடி விளையாட்டில் உள்ள ஆர்வத்தின் காரணமாக விழுப்புண் இல்லாத இளைஞர்களே எட்டுபுளிக்காட்டில் இல்லை என கிராம மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்