மதுரையில் தேசிய ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
மதுரையில் தேசிய அளவில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டியை நேற்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
மதுரையில் தேசிய அளவில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டியை நேற்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
கபடி போட்டிகள் தொடக்கம்
உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில், தேசிய அளவில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் நாளை (3-ந்தேதி) வரை 3 நாட்களுக்கு நடக்கிறது. முன்னதாக செல்லூர் பகுதியில் அமைந்துள்ள கபடி வீரர்களின் சிலை முன்பு கபடி வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பினை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு அங்கிருந்து தொடங்கி போட்டி நடைபெறும் அமெரிக்கன் கல்லூரி வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, மேயர் இந்திராணி, கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஜூனியர் ஆண்கள் அணியில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணிகளும், ஜூனியர் பெண்கள் அணியில் அரியானா, பீகார், இமாச்சலபிரதேசம், தெலுங்கானா, மராட்டியம்,, சண்டிகர், மேற்குவங்காளம், தமிழ்நாடு ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் ஜூனியர் பிரிவு வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். மேலும் பிப்ரவரி மாதம் 26 முதல் மார்ச் 5-ந்தேதி வரை ஈரானில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை கபடி போட்டிக்கான கபடி வீரர்களும் இதில் தேர்வு செய்யப்பட இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்கத்தொகையாக, முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.30 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கின்றன.