கபடி வீரர் மயங்கி விழுந்து சாவு

பொன்னமராவதி அருகே கபடி வீரர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2022-10-26 18:29 GMT

அரை இறுதிக்கு தகுதி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தி.புதுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் அடைக்கலம் (வயது 19). இவர், திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் பொருளாதார பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சிறந்த கபடி வீரரான இவர், பொன்னமராவதி அருகே நரியங்காடு பகுதியில் தீபாவளியையொட்டி இன்று நடைபெற்ற கபடி போட்டியில் குன்றக்குடி அணிக்காக கலந்து கொண்டு விளையாடினார். அதில் அந்த அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

கபடி வீரர் சாவு

இதையடுத்து போட்டி முடிந்தவுடன் அடைக்கலம் தனது சக வீரர்களுடன் திடலின் வெளியே பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து சக வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னமராவதி அருகே வெங்களமேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அடைக்கலத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார்.

நண்பர்கள் கதறி அழுதனர்

அடைக்கலம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கபடி மூலம் அரசு பதவி அடைய வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்ததாக நண்பர்கள் கூறி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதனையடுத்து அடைக்கலத்தின் உடலை சக கபடி வீரர்கள் அங்கிருந்து திருப்பத்தூர் புதுப்பட்டிக்கு கொண்டு சென்றனர்.

ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி

அடைக்கலம் தற்போது நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் சிவகங்கை மாவட்ட அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கபடி போட்டியின் போது கபடி வீரர் மயங்கி விழுந்து இறந்த சம்பவத்தால் தி.புதுப்பட்டி பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்