கபடி போட்டியில் சுருண்டு விழுந்து வீரர் சாவு
கபடி போட்டியில் சுருண்டு விழுந்து வீரர் ஆடுகளத்திலேயே உயிரிழந்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன.
நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் பெரியபுறங்கணியும், கீழகுப்பம் அணியும் மோதின. இதில் பெரியபுறங்கணி அணிக்காக அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் சஞ்சய் என்கிற விமல்ராஜ் (வயது 22) என்பவரும் கலந்து கொண்டு விளையாடினார்.
வீரர் சாவு
பரபரப்பான கட்டத்தில் விமல்ராஜ் ரெய்டு சென்றார். அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர். உடனே விமல்ராஜ், அவர்களிடம் பிடிபடாமல் இருக்க துள்ளி குதித்து தாவினார். அப்போது கீழே விழுந்த அவரை, எதிர் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் மடக்கினார். அப்போது அவரது கால், விமல்ராஜின் தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கியது.
உடனே விமல்ராஜ் எழுந்திருக்க முயன்றார். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியாமல் திடீரென சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே விமல்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார். கபடி வீரர் சுருண்டு விழுந்து இறந்ததால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.