9 ஆண்டாக மத்திய அரசு எதுவும் செய்யவில்லை-கி.வீரமணி குற்றச்சாட்டு
மோடி ஆட்சிக்கு வரும் பொழுது 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார். 9 ஆண்டு ஆகிவிட்டது இதுவரை எதுவும் செய்யவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
மோடி ஆட்சிக்கு வரும் பொழுது 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார். 9 ஆண்டு ஆகிவிட்டது இதுவரை எதுவும் செய்யவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் சிவகங்கையில் மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் சிகாமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜாராம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
தமிழகத்தில் அமைந்த கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி. இது அரசியலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. கொள்கைக்காக அமைந்த கூட்டணி. தமிழ்நாடு சமூக நீதிக்கு வழிகாட்டும் மண். இது பெரியார் மண். நூறாண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி உருவான மண் இது.
பாதுகாப்பான மாநிலம்
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். ஆனால் இதுவரை சமத்துவம் உள்ளதா? இல்லையே! 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதுதான் திராவிட மாடல். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் கவர்னர் அரசியல் சாசனத்தில் சொல்வது போல் நடக்க வேண்டுமே தவிர இஷ்டப்படி செயல்படக்கூடாது.
இந்த ஆட்சியை போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் தமிழ்நாடு தான் பாதுகாப்பான மாநிலம் என்று கோர்ட்டை நாடி உத்தரவு பெற்றுள்ளார். இதுதான் திராவிடமாடல்.
சேது சமுத்திர திட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன. ஆனால் இதுவரை அதற்கு தடை தர கவர்னர் தாமதிக்கிறார்.
மோடி ஆட்சிக்கு வரும்போது 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார். 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எதுவும் செய்யவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தரலாம் என்றார்கள். ஆனால் அதையெல்லாம் தற்போது சும்மா என்று சொல்கிறார்கள். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் 23 கிலோமீட்டர் தொலைவு பாக்கி இருக்கும் போது ராமர் பாலம் உள்ளதாக கூறி இந்த திட்டத்தை நிறுத்தி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் இன்பலாதன், மண்டல செயலாளர் மகேந்திரன், மாவட்ட துணை தலைவர் தனபால், நகரத் தலைவர் மணிமேகலை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முருகேசன் நன்றி கூறினார்.