சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் கி.வீரமணி பிரசாரம்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கி.வீரமணி இன்று பிரசார பயணத்தை தொடங்குகிறார்.
சென்னை,
அண்ணா நினைவு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோட்டில் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகள், சமூக நீதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பயணத்தை நான் தொடங்க இருக்கிறேன். இந்த பயணத்தை 40 நாட்கள் மேற்கொள்ள உள்ளேன்.
மணியம்மையார் பிறந்த தினமான மார்ச் 10-ந் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் பிரசார பயணத்தை நிறைவு செய்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் 2 பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சேது சமுத்திர திட்டம்
ராமர் பாலத்தை காரணம் காட்டி சேது சமுத்திர திட்டம் முடக்கப்பட்டது. தற்போது ராமர் பாலம் இல்லை என்று மத்திய மந்திரியே கருத்து தெரிவித்து உள்ளார். எனவே சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை பிரசாரத்தின்போது விளக்கி பேசுவேன். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தமிழ்நாட்டின் பொருளாதார வளம் பெருகும். மேலும் இந்த திட்டம் இந்திய தீபகற்பத்துக்கும் பாதுகாப்பானது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும் என்பதையும் பிரசார பயணத்தின்போது வலியுறுத்துவேன். இதில் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், '90 வயதிலும் பிரசார பயணம் மேற்கொள்ள வேண்டுமா?' என்று என்னிடம் அக்கறையுடன் கேட்டார். அவர் என்னுடைய இந்த பயணத்துக்கு வாழ்த்து கூறுவார்.
பேனா-கருணாநிதி, மை-பெரியார்
கருணாநிதி எழுத்துகள் எல்லோரையும் ஈர்க்க கூடியது. அவரது பேனா வலிமையானது. அமைக்கப்பட இருக்கும் நினைவு சின்னத்தில் 'பேனா' கருணாநிதி என்றால் அதில் இருக்கும் 'மை' பெரியார். கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை சுய விளம்பரத்துக்காக அவர் (சீமான்) எதிர்க்கிறார். ராகுல்காந்தியின் நடைபயணத்தால் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திராவிடர் கழக துணை தலைவர் கலி பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.