சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை ஐகோர்ட்டின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை குடியரசுத்தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் டி.ராஜா. சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பணி ஓய்வுபெற்றார். அவரை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் டி ராஜா.
இதற்கிடையே ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முரளிதரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த முரளிதரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது.
கொலீஜியத்தின் பரிந்துரைபடி முரளிதரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்காததன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் கொலீஜியமும் கடந்த ஏப்ரல் தனது பரிந்துரையை திரும்பப்பெற்றுக்கொண்டது. அவரை தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக சென்னை ஐகோர்ட்டிற்கு முழு நேர தலைமை நீதிபதி நியமிக்கப்படவில்லை. எனவே டி ராஜாவே 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். இந்த நிலையில், டி ராஜா இன்றுடன் ஓய்வுபெறுகிறார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் 2 வது மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.
நீதிபதி வைத்தியநாதன் மே 25 அம் தேதி முதல் தலைமை நீதிபதிக்கான பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவையில் பிறந்த நீதிபதி வைத்தியநாதன், பள்ளி மற்றும் சட்டப் படிப்பை சென்னையில் முடித்தார். 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் பணியை வைத்தியநாதன் தொடங்கினார். கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.