குடம், குடமாக சண்முகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விசாக திருவிழாவையொட்டி சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-12 20:08 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விசாக திருவிழாவையொட்டி சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விசாக திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப் படுவது விசேஷமாகும்.இந்தஆண்டிற்கான விசாகத் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக விசாக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.விழாவையொட்டி சண்முகர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமான் புறப்பட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.

குடம், குடமாக பாலாபிஷேகம்

இந்த நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு முதல் கால பாலாபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்தி கடனாக கொண்டு வந்த பால் குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. காலையில் இருந்து மதியம் 2.20 மணி வரை இடைவிடாது 8 மணி நடந்த பாலாபிஷேகமானது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

திருவிழாவை ஒட்டி மதுரை வைகை ஆற்றில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக, சாரை, சாரையாக பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

அலைமோதிய கூட்டம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் பறவை காவடி உள்ளிட்ட விதவிதமான காவடிகள் எடுத்தும். 10 அடி, 15 அடி, 20 அடி என்று நீளமுள்ள அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் இருந்த ஊரடங்கினால் கடந்த 2 ஆண்டுகளாக நேர்த்திகடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் குவிந்து இருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றமே விழா கோலம் பூண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவின் நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

ஆண்டுக்கு ஒருமுறை இருப்பிடம் விட்டு இடம்பெயரும் சண்முகர்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களில் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தன் இருப்பிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது எதார்த்தம். இதே சமயம் விசாக திருவிழாவில் மட்டுமே தெய்வானை, வள்ளி சமேத சண்முகர் தன் இருப்பிடமாக சண்முகர் சன்னதியை விட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். இத்தகைய சிறப்பு ஆண்டுக்கு ஒருமுறை என்பது குறிப்பிடதக்கது.

பக்தர்கள் தரிசனத்திற்காக முழுநேரம் நடை திறப்பு

திருப்பரங்குன்றம் கோவிலை பொறுத்தவரை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு மீண்டும் 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். ஆனால் நேற்று வழக்கம்போல மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்படவில்லை. நடை திறந்தே இருந்தது. அதனால் தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் விசாக திருவிழா நாளில் பகலில் நடைசாத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்