தர்மபுரியில்நகராட்சி ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Update: 2023-08-09 19:45 GMT

தர்மபுரி

தர்மபுரியில் நகராட்சி ஊழியரின் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பதிவறை எழுத்தர்

தர்மபுரி வள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 36). நகராட்சி ஊழியர். இவர் சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் வேலூரில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் வசந்தா மற்றும் அவருடைய மகன் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். வீட்டின் வெளிப்பக்க கதவு மூடி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் மின்விளக்கு எரிந்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த வசந்தா அந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது.

நகைகள் திருட்டு

இதையடுத்து பீரோவுக்குள் இருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. அதிகாலையில் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றிருப்பது தெரிந்தது. இது தொடர்பாக வசந்தா தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்