ஓசூர் அருகேதனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் நகை திருட்டுபோலீசார் விசாரணை

Update: 2023-07-25 19:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேஸ்புரம் பகுதியில் தனியார் லேஅவுட் உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் 4 பேர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஒவ்வொரு வீட்டின் வாசல் கதவையும் தட்டி உள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதை அடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த நபர்கள் சந்தோஷ்குமார் (வயது 29) என்ற தனியார் நிறுவன ஊழியரின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 2½ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றனர். இதேபோல் அருகில் உள்ள பிச்சாண்டி என்பவரது வீட்டில் அந்த நபர்கள் திருட முயன்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள லே அவுட் அலுவலகத்திலும் அவர்கள் புகுந்து திருட முயன்றது தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் 4 பேர் வீடுகள் முன்பு நடமாடுவதும், 3 பேர் முகமூடி அணிந்து இருப்பதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்