நாகர்கோவிலில் கல்வி அதிகாரியிடம் 2¾ பவுன் நகை பறிப்பு
நாகர்கோவிலில் சாலையில் நடந்து சென்ற கல்வி அதிகாரியிடம் 2¾ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் சாலையில் நடந்து சென்ற கல்வி அதிகாரியிடம் 2¾ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கல்வி அதிகாரி
நாகர்கோவில் நேசமணிநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜோஸ்பின் தாமஸ் (வயது 62), முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜோஸ்பின் தாமஸ் கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஜோஸ்பின் தாமஸ் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமரா
ஆசாரிபள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் வசந்தா என்ற பெண்ணிடம் 7¾ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர். அதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவாிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவா் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 19) என்பது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் அவருடன் வந்த மற்றொரு மர்ம நபரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வசந்தாவிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அய்யப்பன் உள்ளிட்ட 2 பேரும் சேர்ந்து தான் ஜோசப்பின் தாமசிடமும் கைவரிசை காட்டினார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.