குஜிலியம்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
குஜிலியம்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். கோலார் நகரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 63). இவர் கரூர் மாவட்டம், பிச்சம்பட்டியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
முகுந்தன், குஜிலியம்பாறை அருகே பாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் தனது மகன் திருமணத்திற்கு துணிகள் வாங்குவதற்காக கடந்த 5-ந்தேதி பாளையத்தில் இருந்து சேலத்துக்கு தனது மனைவி ஸ்டெல்லாவுடன், முகுந்தன் சென்றார்.
இந்தநிலையில் பின்னர் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து முகுந்தன் குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.