விழுப்புரம் அருகேமின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

விழுப்புரம் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-26 18:45 GMT


விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே உள்ள கலிங்கமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி அனுசுயா (வயது 54). இவர் விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். பின்னர் மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.

நகை கொள்ளை

உடனே அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் 110 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசுகள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுபற்றி அவர், கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். அனுசுயா, வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பட்டப்பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்