குன்னம் அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு
குன்னம் அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீட்டின் பூட்டு உடைப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் அரியலூர்- பெரம்பலூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் சசிகுமார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 23). மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆவதால் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்ற சசிகுமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று விடியற்காலை சசிகுமார் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணி தமிழ்ச்செல்வி வெளியே வந்து பார்த்தபோது சசிகுமார் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து, அவர் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து 5 பவுன் செயின், 1 பவுன் தோடு, 1 ஜோடி கொலுசு மற்றும் ரூ.2,500 ஆகியவை திருடு போய் இருந்தது.
நகை, பணம் திருட்டு
அதேபோல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (60). இவருக்கு 2 இடங்களில் வீடு உள்ளது. பழைய வீட்டை பூட்டி சாவியை தாழ்வாரத்தில் மேல் புறம் வைத்துவிட்டு அருகே உள்ள புது வீட்டிற்கு மனைவி சின்னம்மாளுடன் தூங்கச்சென்றார். காலை 6 மணியளவில் பழைய வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் தாலி மற்றும் வெள்ளி கொலுசு மற்றும் ரூ.900 ஆகியவை திருட்டு போய் இருந்தது.
மேலும் கிழக்கு தெருவில் உள்ள நல்லுசாமி (47) தனது மகள் கஸ்தூரி வீட்டுக்கு சென்றவர் காலை வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பட்டுப்புடவை ரூ.2,500 ஆகியவை திருட்டு போயிருந்தது.
கல்வீசி தாக்குதல்
பேரளி தெற்கு தெருவை சேர்ந்த சின்னப்பிள்ளை (65) என்பவரது ஓட்டு வீட்டின் திண்ணையில் ரத்தினம் என்பவர் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் சின்னப்பிள்ளை வீட்டு வாசலில் 3 மர்ம ஆசாமிகள் நின்று கொண்டு உள்ளனர். அவர்களைப் பார்த்து ரத்தினம் சத்தம் போட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமி கல்லை எடுத்து ரத்தினம் மீது தூக்கி வீசி தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தாடை பகுதியில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சிறப்பு இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.