சேலத்தில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு-போலீசார் விசாரணை

சேலத்தில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-15 21:05 GMT

பணம் திருட்டு

சேலம் உடையாப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 43), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வீராணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து சரவணனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இந்த திருட்டு தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி

சேலம் தாதகாப்பட்டி வேலு புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மனைவி சுசீலா (45). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது அண்ணனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது ஓடுகள் பிரிக்கப்பட்டு சேதமடைந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்